Jan 15, 2009

பொங்கலோ பொங்கல்


பச்சைப் பாவாடைக் கட்டி
புதுப் பொண்ணா பூத்து நின்னா...
தை மாச அறுவடைக்கு
நெல்லு நெல்லா காய்ச்சு நின்னா
என் உசிருக்கு உசிரான
பூமித் தாயி...

பழசையெல்லாம் கழிச்சுப்போட்டு
வீட்டுக்கு வெள்ளை அடிச்சு
காத்திருந்தோம் மாசப் பொறப்புக்கு..

வாசல் மறைக்க
மாக்கோலம் போட்டு
மாடு கன்னுக்கு
அலங்காரம் பண்ணி
அறுவடை செஞ்ச
புது நெல்லை
புடைச்சு வச்சோம்...

புதுப் பானையில
பொங்கல் வச்சு
பொங்கலோ பொங்கல் பாடி
கோமாதாவுக்கு படையல் வச்சு
செங்கரும்பு வெட்டித் தின்னோம்...

பட்டு பாவடை சட்டை போட்டு
ரெட்டை சடை நிறைய
பூ முடிச்சு
கையில கரும்ப வச்சுகிட்டு
இளசுகளா
ஊர் பூரா சுத்தி வந்தோம்...


என் தாத்தன்
எனக்காக கட்டி வச்ச
ஊஞ்சலுக்கு போட்டி போட்டு
நாள் பூரா ஆடி களிச்சோம்...

பெருசா வெள்ளை வேட்டிய
ஊர் மந்தைக்கு நடுவுல கட்டி
விடிய விடிய தூங்கி விழுந்து
படகோட்டி படம் பார்த்தோம்...

ஓட்டப் பந்தையத்திலிருந்து
மாறுவேசப் போட்டி வரைக்கும்
எதுலையுமே கலந்துக்காம
ஓரமா நின்னு
கேலி செஞ்சு வெளையாடினோம்...

பழையன கழிஞ்சு
புதியன புகுதல் போல
இன்னைக்கு அந்த சந்தோஷம் எல்லாம்
மறஞ்சு போச்சு
பழக்கவழக்கம் மாறிப்போச்சு..

ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வெச்சு...
குக்கர் விசிலுக்கு
பொங்கலோ பொங்கல் பாடி
நாள் பூரா டிவி பார்த்து
நலிஞ்சு போச்சு நம்ம சனம்...

என் பூமித் தாயி மேல
அடுக்கடுக்கா வீடு கட்டி
பாரம் ஏத்தி வச்சிருக்கான்
இந்தப் பாவி மனுசப் பய...

நெல்லுக்குத் தண்ணி இல்லாம
அறுவடைக்கும் காசு இல்லாம
பொங்கித் தின்ன சோறு இல்லாம
ஏங்கிக் கிடக்கறான்
என் குடியானவன்...

எல்லா சனமும்
நல்லா வாழ
சந்தோசம் பொங்கி வழிய
நான் பாடுறேன்
பொங்கலோ பொங்கல்...

No comments:

Post a Comment