Feb 6, 2017

நிலானி

மணல் மணலா கோர்த்து வச்சு

மணி மணியா அலங்கரிச்சு

மயிலிறகு படுக்கையிட்டு

தகப்பன் கோட்டை ஒன்னு கட்டி வைக்க

வெள்ளெருக்கு நாரெடுத்து

பாட்டன் அரைஞாண் கொடி செய்ய

தங்கத்துல காதுக்கு

தாத்தன் குண்டுமணி தோடு செய்ய

வெள்ளி கொலுசெடுத்து

மாமன் தான் சீர் வைக்க

சொந்தம் அத்தனையும்

கைக்குள்ள முடிஞ்சுகொள்ள

அந்த நிலவே உசிர் கொண்டு

மகளாக எம்மடியில் உதிச்சாளே!

அவ உருட்டும் விழியாலே

உலகத்த சுழல வச்சா

பொக்க வாய் சிரிப்பாலே

காலத்த உறைய வச்சா!

அந்த நிலவத்தான் காட்டி

சோறூட்ட காத்திருக்கேன்

அவ மழலை மொழி கேட்க

நானுந்தான் தவங்கெடக்கேன்!!!


Jun 25, 2015

இரவின் காதலி-2

நினைவுகளின் பிரதிபலிப்பாய்
இரவின் பெருமூச்சுகள்
தூக்கத்தை முத்தமிட்டு
ஒத்தி வைக்கின்றன
 
இதுதான் சாக்கென்று
சலனமற்ற இருளின்
அகங்கார ஆலிங்கணம்
மீண்டு்ம் மீண்டும்
நிகழ்ந்தேறுகிறது
 
வியத்தல் விணை
விட்ட இடத்தினின்று
புனராவர்த்தம் செய்வது
முடியாது தொடர
 
ஆர்பரிப்பு அமைதியாகி
ஆனந்தம்
ஆழிப்பேரலையாகும் நேரம்
வைகறை வந்ததும்
விட்டொழித்துச் சென்றுவிட்டது
 
இறவாமல் பிறவாமல்
எனை ஆட்கொள்ள
இறைவனை வேண்டவில்லை
இருளிடம் மட்டும்
வேண்டுகிறேன்!!!

Apr 14, 2015

விடியல்

சில நொடி சந்தோஷத்தின்
ஊக்கத்தொகை
சில ஆண்டுகளுக்கான
கண்ணீர் விதி என


சிரிப்பின் முடிவில்
இரு க்ஷணங்கள்
என்ன காத்திருக்கிறதோ
என தொக்கி நிற்கின்றன

கிழமைக்கு ஒரு சாமியென
அட்டவணை போட்டுத் தரும்
அம்மாவும்

உனக்கு நேரம் நல்லா இருக்கு கண்ணு
எல்லாம் நல்லதா நடக்கும் என
அம்மாச்சியும்
ஆறுதல் சொல்ல ஆரம்பித்து
ஆண்டு பத்தாகிறது

ஆனால்..
எனக்கான விடியல் மட்டும்
நனைந்த விறகுக்கட்டையாய்
மூலையில் விழுந்தே  கிடக்கிறது..

Jan 9, 2015

இரவின் காதலி

இரவுகளின்
காதலி நான்

ஒளியின் ஆர்பரிப்பு
அடங்கிப் போன
மீளா இரவுக்காக
காத்திருக்கும்
காதலி நான்

உறங்கும் காதலன்
தோள் சாய்ந்து
உறங்காமல்
இருளை சூல் கொண்ட
இரவின் காதலி நான்

ஆயிரம் கனவுகளின்
ஒற்றை ஊன்றுகோல்
ஆயிரம் ஏமாற்றங்களின்
ஒற்றை ஆறுதல்

சப்தங்களும்
நயன பாஷகைளும்
அற்றுப் போன நிலையில்

விடை தெரியா
கடிதங்களின்
உணர்வுகளுடன் சல்லாபிக்கும்
இரவின் ஒருதலைக்
காதலி நான்!!!


Jan 8, 2015

தூக்கம் பறித்த இரவுகள்

சில நினைவுகள்
இரவுகளின்
சில நிமிடங்களைக்
கடன் வாங்கிக்கொள்கின்றன..

பிடித்த வரிகளுக்கிடையில்
லயித்த நொடிகள்
தூக்கம் களைத்துச்
செல்ல

கணத்த இதயத்துடன்
கவிதைக் காடுகளுக்குள்ளே
இரவின் உலாவல்
நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கிறது!!!


Nov 8, 2014

உளறுகிறேன்!!!!

இரவின் நீட்சியில்
நினைவுகள்
சிறகு முளைக்கப்பெற்று

தூவானம் ஓயாத பொழுதுகளிலும்
கடைசி பறவையாய்
உடல் நனைத்து
சிறகுலர்த்திச் செல்கின்றன..

பிரிவுணர்ச்சியின் வலியும்
நினைவுகளின் சுகமும்
தக்கடையின் இரு தட்டுகளாய்..

முகத்திரை கிழித்தெறிந்து
கண்ணீரை அப்பிக்கொள்ள..
அட..
ஒழுங்காய் ஒரு காரணம்???

ஏதோ ஒன்றின் இழப்பில்
ஏதோ ஒன்றை அடைதல்
இயற்கையின் எடுத்தோத்து

நெஞ்சுக்கூட்டின் நடுவே
ஆழ்துளை கிணறு செய்து
இனம்புரியா உணர்ச்சிகளை
வாரி வெளியிறைக்கும்
முயற்சியில்
தோற்றுக்கொண்டே இருப்பது
இரவின் ஊழ்வினை

தூக்கத்தில்
உளறவில்லை..
தூங்காமல் உளறுகிறேன்..

May 10, 2014

மௌனத்தின் மறுமொழி

நுரையீரல் முழுதும்
நிறைத்துக்கொண்ட
அவன் வாசம்
துணைநின்ற
தனிமையின் உச்சத்தில்

அவன் அருகின்றி
பிரக்ஞை
அற்றுப்போன
தருணங்கள்
மரணிக்கக்
காத்திருக்கின்றன!!!

அம்மரணத்தின்
மறுமுனையில்
ஜனனிக்கக் காத்திருக்கும்
கனவுகளுக்காக நான்!!!

இயல்பிற்கப்பாற்பட்ட
மொழியின் மௌனம்
சாத்தியமான
வேளைகளில்
விழிநீரின்
ஒற்றைப் பரிமான
வரைகோடுகள்
அவன் திசைநோக்கியே
இடமாற்றம் பெறுகின்றன!!!