Jan 15, 2009

பொங்கலோ பொங்கல்


பச்சைப் பாவாடைக் கட்டி
புதுப் பொண்ணா பூத்து நின்னா...
தை மாச அறுவடைக்கு
நெல்லு நெல்லா காய்ச்சு நின்னா
என் உசிருக்கு உசிரான
பூமித் தாயி...

பழசையெல்லாம் கழிச்சுப்போட்டு
வீட்டுக்கு வெள்ளை அடிச்சு
காத்திருந்தோம் மாசப் பொறப்புக்கு..

வாசல் மறைக்க
மாக்கோலம் போட்டு
மாடு கன்னுக்கு
அலங்காரம் பண்ணி
அறுவடை செஞ்ச
புது நெல்லை
புடைச்சு வச்சோம்...

புதுப் பானையில
பொங்கல் வச்சு
பொங்கலோ பொங்கல் பாடி
கோமாதாவுக்கு படையல் வச்சு
செங்கரும்பு வெட்டித் தின்னோம்...

பட்டு பாவடை சட்டை போட்டு
ரெட்டை சடை நிறைய
பூ முடிச்சு
கையில கரும்ப வச்சுகிட்டு
இளசுகளா
ஊர் பூரா சுத்தி வந்தோம்...


என் தாத்தன்
எனக்காக கட்டி வச்ச
ஊஞ்சலுக்கு போட்டி போட்டு
நாள் பூரா ஆடி களிச்சோம்...

பெருசா வெள்ளை வேட்டிய
ஊர் மந்தைக்கு நடுவுல கட்டி
விடிய விடிய தூங்கி விழுந்து
படகோட்டி படம் பார்த்தோம்...

ஓட்டப் பந்தையத்திலிருந்து
மாறுவேசப் போட்டி வரைக்கும்
எதுலையுமே கலந்துக்காம
ஓரமா நின்னு
கேலி செஞ்சு வெளையாடினோம்...

பழையன கழிஞ்சு
புதியன புகுதல் போல
இன்னைக்கு அந்த சந்தோஷம் எல்லாம்
மறஞ்சு போச்சு
பழக்கவழக்கம் மாறிப்போச்சு..

ஸ்டிக்கர் கோலம் ஒட்டி வெச்சு...
குக்கர் விசிலுக்கு
பொங்கலோ பொங்கல் பாடி
நாள் பூரா டிவி பார்த்து
நலிஞ்சு போச்சு நம்ம சனம்...

என் பூமித் தாயி மேல
அடுக்கடுக்கா வீடு கட்டி
பாரம் ஏத்தி வச்சிருக்கான்
இந்தப் பாவி மனுசப் பய...

நெல்லுக்குத் தண்ணி இல்லாம
அறுவடைக்கும் காசு இல்லாம
பொங்கித் தின்ன சோறு இல்லாம
ஏங்கிக் கிடக்கறான்
என் குடியானவன்...

எல்லா சனமும்
நல்லா வாழ
சந்தோசம் பொங்கி வழிய
நான் பாடுறேன்
பொங்கலோ பொங்கல்...

சிங்காரச் சென்னை...


சிங்காரச் சென்னை...
நடு ரோட்டில் எச்சில் துப்பும்
நவ நாகரிக சமூகமும்
சட்டசபைக் குறிப்பிலிருந்து
நீக்கப்பட்ட வார்த்தைகளும்...
சேலை கட்டியிருந்தால்
போதுமென உரசிப்பார்க்கும்
பத்தரைமாற்றுத் தங்கங்களும்...
பணம் எந்த வழியில்
வந்தால் என்ன
என் கைக்கு வந்தால் போதும்
என நினைக்கும் முதலைகளும்
நிறைந்த அழகான ஊர்...
சிங்காரச் சென்னை...

Jan 11, 2009

சுமைதாங்கிக்கல்


தோற்பதர்க்க்காகவே நான்
என்னைத் தோற்கடிக்க
எத்தனையோ விஷயங்கள்...

வறண்டு போய்க் கிடந்த
என் இதயத்தில்
உன் நினைவுகளும் என் அழுகைகளும்
பாரம் ஏற்றிவிட்டன..

வெளியே சொன்னால்
அந்த வார்த்தைகளும்
பாரம் சேர்த்துவிடுமோ
என பயப்பட்டுக்கொண்டே
அமைதி காக்கிறேன்

சொல்ல வரும் பொது
உன் அமைதி என்னைத் தடுக்கிறது
நீ பேசும் பொது
இந்த நிலையாவது தொடரட்டும்
என நான் அடங்கிவிடுகிறேன்...


இந்த நினைவுகளைக்
களையாய் எண்ணி
கிள்ளி எறிகிறேன்
ஆனால் விருட்சமாய் வளர்கிறது...

உன்னை என்னிடம் சேர்க்கச் சொல்லி
இருக்கும் கடவுளிடம் எல்லாம் வேண்டுகிறேன்...
இப்போது மட்டும்
முகவரி தெரிந்ததா...?
என்று எள்ளி நகையாடுகின்றன...

இவற்றை வெறும் ஈர்ப்பு என்று
கூறிவிடாதே..
கருகிப்போய்விடும் என் இதயம்...
சாம்பலில் கூட
உன் நினைவுகளின் வாசம்...

முதல் நாள் பள்ளியில்
அப்பா எப்போ வருவார்
எனக் காத்திருக்கும்
குழந்தையாய்
உனக்காக நிதமும்
காத்துக்கொண்டிருக்கிறேன்...

பிறவாத கருவுக்கு மட்டும் இல்லை
சொல்லாத காதலுக்கும்
ஒரு நினைவுச் சின்னமாய்
சுமைதாங்கிக்கல்
எங்கோ இருந்து
கரிசனமாய் ஒரு பார்வை பார்த்தது...

Jan 8, 2009

மண் வாசம்


கயிற்றுக்கட்டிலில் படுத்துறங்கி
வேப்பங்குச்சியில் பல்துலக்கி
கம்மங்கூழ் குடித்து
கிணத்துப் படிக்கட்டில்
தண்ணீர் மொண்டு குளித்து
புளியமரத்தடியில் சொக்கட்டான் ஆடி
திருட்டு மாங்காய் அடித்து
ஆடு மேய்த்து
ஊர் மந்தையில் சடுகுடு ஜெயித்து
புழுதியோடு புழுதியாய்
உருண்டு பிறண்டு
கூட்டாஞ்சோறும் பிள்ளைப் பொங்கலும் கொண்டாடி
தாத்தன் கை பிடித்து
மரம் நட்டு தண்ணீர் ஊற்றி வளரத்(ந்)த சுகம்
இன்று...
இட்லி தோசை எல்லாம் மாறி
பிட்ஸா என்று ஒன்றைத் தின்று
காக்காய் குளியல் குளித்து
காசு சம்பாதிக்கும்
இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில்
எட்டாக்கனியாயும் பகல் கனவாகவும்
என் முன்னால் கொக்காணி காட்டி சிரிக்கின்றன
என்ன சாதித்தாய் என்று

பத்திரிகைச் சுதந்திரம்


கத்தி முனையை விட
பேனா முனை கூர்மையானதாம்
சொன்னான் ஒரு பைத்தியக்காரன்...
இன்று பேனா முனைகளால்
கிழித்தெரியப்படும் உண்மைகளெல்லாம்
தம் கத்தி முனைகளால்
பேனாக்களை காவு
வாங்கிக்கொண்டிருகின்றன...