Oct 18, 2012

கைகோர்த்த கனவுகள்

மீண்டும் மீண்டும்
படித்துவிட்டு
நாணுகிறேன்
முதல் கடிதத்தின்
வரிகளை மடித்தபடி...

தினமும் எண்ணிக்கையில்
நாள் ஒன்று குறைகிறது
கனவுகளை விகிதாசார முறையில்
நனவாக்கியபடி

தோழி செல்லமாய்
சலித்துக்கொள்கிறாள்
இன்னும் இருபது நாட்கள்
எனை பொறுக்க  வேண்டுமென..

அதரங்களின் ஓரத்தில்
தொக்கி நிற்கும் சிரிப்பே
சொல்லிடுமாம்
என் மூளை உலாவ சென்றிருப்பதை

நித்தமும் பரிகசிகிறாள்
ஏதேனும் சொல்லிச்சொல்லி
போடி... உனக்கென்ன புரியும்
என் கன்னத்து செங்காந்தள் பற்றி ??

இதோ அதோ என்று
நெருங்கியும்
தூரமாய் நிற்கும் நாளுக்காய்
 காத்திருக்கிறேன் கண்மூடி..

May 19, 2012

வசந்தம் வந்ததோ!!!



தூரத்தில் எங்கோ ஆலயத்தில்
மணி இருமுறை அடித்து
நிசப்தம் கலைத்துச் செல்கிறது..

பூட்டிய இருட்டறைக்குள்
இறுக மூடியக் கண்களுக்குள் மட்டும்
கலர் கலராய்க் கீற்றுக்கோடுகள்

காத்திருத்தல் தவம் முடித்த கனவுகள்
விடியலை ஒத்திப்போட்டபடியே
ஒவ்வொரு நிறமாய் வேடிக்கைக்காட்ட..

எனக்கு மட்டும் கேட்கும்படியாய்
என் காதருகில் வீனைத்தந்திகள் 
மதுவந்தி மீட்டி மயக்க...

கண்ணாமூச்சி காட்டிய பட்டாம்பூச்சி ஒன்று
முத்தாய்ப்பாய் முத்தமிட்டுச் சென்றது
வசந்தம் வந்த கதையை பறைசாற்றி.. !!!

Mar 17, 2012

கதறல்

கத்திக் கதறி கூப்பாடு போட்டு 
ஓய்ந்து சரிந்த 
தமிழனின் மரண ஓலத்துக்கு மட்டும் 
நம் காதுகள் 
செவிப்புலன் இழந்து போனதேனோ??

பிள்ளைகள் உடல் சிதைக்கப்பட்டு..
பெண்கள் மார் அறுக்கப்பட்டு.. 
நா வறண்டு கதறிச்செத்தவனுக்கு
இரண்டு சொட்டுக் கண்ணீர் விடுவதினும்
நூறாவது சதம் முக்கியமாகிப்போன 
மூடர்கள் நாம்.. 

ஐந்து குண்டுகள் மாரில் வாங்கிச் செத்தான்
அந்த பால்மணம் மாறா பாலகன்..
முதுகெலும்பில்லா மூடர்கள் நாம்..
வீட்டுக்குள் ஒளிந்துகொண்டோம்..
கொலைகாரனின் ஆதரவிற்காக 
எட்டப்பர்கள் ஆகிவிட்டோம்.. 

சொல்லி அழ வார்த்தைகள் இல்லை..
கேட்க ஒரே ஒரு கேள்வியுண்டு.. 
இந்தியன் ஏன் இவ்வளவு மலிந்து போனான்??