Nov 8, 2014

உளறுகிறேன்!!!!

இரவின் நீட்சியில்
நினைவுகள்
சிறகு முளைக்கப்பெற்று

தூவானம் ஓயாத பொழுதுகளிலும்
கடைசி பறவையாய்
உடல் நனைத்து
சிறகுலர்த்திச் செல்கின்றன..

பிரிவுணர்ச்சியின் வலியும்
நினைவுகளின் சுகமும்
தக்கடையின் இரு தட்டுகளாய்..

முகத்திரை கிழித்தெறிந்து
கண்ணீரை அப்பிக்கொள்ள..
அட..
ஒழுங்காய் ஒரு காரணம்???

ஏதோ ஒன்றின் இழப்பில்
ஏதோ ஒன்றை அடைதல்
இயற்கையின் எடுத்தோத்து

நெஞ்சுக்கூட்டின் நடுவே
ஆழ்துளை கிணறு செய்து
இனம்புரியா உணர்ச்சிகளை
வாரி வெளியிறைக்கும்
முயற்சியில்
தோற்றுக்கொண்டே இருப்பது
இரவின் ஊழ்வினை

தூக்கத்தில்
உளறவில்லை..
தூங்காமல் உளறுகிறேன்..

May 10, 2014

மௌனத்தின் மறுமொழி

நுரையீரல் முழுதும்
நிறைத்துக்கொண்ட
அவன் வாசம்
துணைநின்ற
தனிமையின் உச்சத்தில்

அவன் அருகின்றி
பிரக்ஞை
அற்றுப்போன
தருணங்கள்
மரணிக்கக்
காத்திருக்கின்றன!!!

அம்மரணத்தின்
மறுமுனையில்
ஜனனிக்கக் காத்திருக்கும்
கனவுகளுக்காக நான்!!!

இயல்பிற்கப்பாற்பட்ட
மொழியின் மௌனம்
சாத்தியமான
வேளைகளில்
விழிநீரின்
ஒற்றைப் பரிமான
வரைகோடுகள்
அவன் திசைநோக்கியே
இடமாற்றம் பெறுகின்றன!!!


Mar 7, 2014

இரவுப்பயணம்

கவிழக் காத்திருக்கும்
இரவுக்குள்
அடங்கியிருக்கும்
எதிர்பார்ப்புகள்
ஊடலும் கூடலும்
கூடல் நிமித்தமான ஊடலுமாய்!!!

முன்னிரவின்
இதழ் ஒற்றலில்
துவங்கி
பின்னிரவின்
இமை ஓரத்துக்
கண்ணீரென

இடைப்பட்ட 
பயணத்தின்
நினைவுகள் யாவும்
தூரத்துத்
தேநீர் கடையில்
ஒலிக்கும்
நடுநிசி
இசைக்கோப்புகளின்
பல பல்லவிகளில்
இடைச்சொருகலாய்














நீண்ட நெடும் 
இரவுப்பயணத்தின்
ஒப்பந்தங்கள் யாவும்
முத்தங்கள் கொண்டே 
கையெழுத்தாகின்றன..

வரவு செலவுக்
கணக்கில்
காதல் மிகுந்த 
காமமும் 
காமம் மிகுந்த 
காதலும்!!!

Feb 10, 2014

எழுதித்தீராதது

உனக்கும் எனக்குமான 
உணர்வுகள்
சில வரி சிலாகிப்புக்குள்
அடங்கிப்போக
மறுதலிக்கின்றன...

சேர்த்து வைத்த
காதலும் காமமும்
எழுதிவிடின்
இளைத்திடுமோ???

எழுதித் தீர்த்திடவே
தேடியலைகிறேன்..
பாரம் ஏற்றுவதில்மட்டுமே
குறியாய் இருக்கின்றன..

அகத்திணையில்..
கிட்டாத வார்த்தைகளை
எட்டாத்தொலைவு வரை
தேடிச் சென்றும்
இல்லாமல் திரும்பிவருதல்
ஏமாற்றமில்லை!!!





Jan 6, 2014

கொஞ்சமாய் வீட்டு ஞாபகம்


கையை உதறிவிட்டு
ஓடும் குழந்தையாய்
திசை மறந்து
ஓடிசெல்கின்றன நினைவுகள்
கடிகார முட்களைப் போல்
துரத்திப் பிடித்தபடி ஒன்றும்
விட்டு விலகியபடி மற்றொன்றும்

கடந்து செல்லும் மனிதர்களில்
யாரோ ஒருவரின்
ஏதோ ஒரு சாயலோடு
சில நிகழ்வுகள் சில நினைவுகள்
பிடித்த பாட்டை முணுமுணுப்பதுபோல்
நாள்முழுதும் நீங்காமல்


இருபது நிமிட
தொலைப்பேசுதலில்
என் தூரத்து உலகிற்கும்
எனக்குமான இடைவெளியை
நிரப்பப் போராடும்
அம்மாக்களும் அம்மாச்சியும்..

நண்பனின் முகநூல் பக்கத்தின்
பழைய நாட்குறிப்பிலிருந்து
புதிதாய் பகிரப்பட்ட
ஒற்றைப் புகைப்படமுமே 

இழந்தவற்றிற்கான
ஒற்றைப்பருக்கை இழப்பீடு...
பார்த்து பேசிச்சிரிக்க
பழகிய மனிதரில்லாமல் 
ஏங்கித்தவிக்கையில்..