Nov 19, 2013

அரற்றல்


அடைத்த கதவுகளின்
இந்தப்புரத்தில்
ஒரு இருண்ட பாலைவனம்
அதில்
அழுந்தப் புதைக்கப்பட்ட வலிகள்
வடிகால் தேடும் முயற்சியில்

இதற்கென என்றின்றி
எதற்கென வேணினும்
பெருகக் காத்திருக்கும்
கண்ணீரும்

நடுநிசித் தேடல்களில்
ஏமாறித் திரும்பி வந்த
வெறுங்கையும்
நித்தம் ஒரு பொருள் சொல்லி
வெறுப்பை விழுங்க வைக்க

பழுப்பேறிய நாட்களின்
மூடுபனித் துயரமென
ஊடலும் கூடலுமான  நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை உடைக்கும் வேளையில்

சலனமற்றத் தனிமையின்
பெருங்குரல் அரற்றலின்
எதிரொலியாய்
கழுத்தையிறுக்கும் பயம்

சோறுண்ண உயிர்வாழ
நீ நிறைந்திருக்கும்
தூரத்துக் கனவுகள் மட்டுமே
ஊக்கமாய்
நனவின் உணர்வுகள்
நலிந்துபோய் நான்..


Jan 29, 2013

உயிருணர்ந்த மொழி

தமிழெழுத்தில்
ஒரேழுத்து குறைவதை
உன் இன்மை உணர்த்திச்சென்றது..

என் எழுத்தில்
உயிர்மட்டும் குறைவதாய்
என் கவிதை இடித்துரைத்தது...

"நீ" அருகிலின்றி
என் தமிழ் மட்டும்
உயிருணர்ந்து இசைத்திடுமோ?? 

Jan 13, 2013

என் அம்மா எழுதியதாய்..


புது நெல்லும் புது நாத்தும்
பசும்மஞ்சள் பசுஞ்சாணம்
புடிச்சு வெச்ச பிள்ளையாரும்

தாத்தன் கொண்டுவந்த
பொங்கச்சீர் பானையும்
வேம்பும் ஆவரம்பூவும்
சேர்த்து கட்டிவெச்ச காப்பும்

கணு பார்த்து வாங்கிவெச்ச
இருசோடி செங்கரும்பும்
செம்மண் கரைகட்டி
பச்சரிசி கோலமிட்டு
சீரமைச்ச வாசலும்

உன்ன காணாமத் தேடுதடி
என் கண்ணாணக்  கண்ணம்மா
விடியலும் கூடத்தான்
கொஞ்சம் மங்கலாய்க்
காணுதடி


வீடு நிறைக்க
சொந்தமிருந்தும்
விருந்தோம்ப பந்தமிருந்தும்
கைக்கெட்டா தூரத்திலே
கனவுபோல் நீயிருக்க

வெறிச்சோடியிருக்கும் வீட்டுக்குள்ள
பொங்கலென்ன தீவுளி என்ன
வருஷத்துக்கு ஒருமுறை
நீ வரும் நாளுக்காக
நித்தம் நித்தம்
காத்திருக்கேன்..


Jan 6, 2013

சந்திக்கும் வரையில்..


முடிந்தவரை இறுக்கிக்கோர்த்தும் 
நழுவிச்சென்ற விரல்களை 
மீண்டும் இழுத்துக்கொள்ள 
ஏனோ முடியவில்லை 

பிரிந்துசெல்கையில்  இட்ட 
முத்திரையின் அழுத்தம் கூடியது..
உன் இதழ்களாலும் 
என் கன்னத்தின் 
கண்ணீர் வரிகளாலும்..


அறையெங்கும் கலைக்கமுடியாதபடி
உன் அடையாளங்கள்..
அழுக்குப் போர்வைகூட
உன் ஸ்பரிசம் தொட்டதால்
அருகிலேயே..

சாயம் ஏறிய
தேநீர் கோப்பைக்கும் தெரியும்
பசலை படர்ந்ததால்
அவை தீண்டதகாதன
ஆகிவிட்டதை..

போதாக்குறைக்கு
இந்த நெட்டை மரங்கள் வேறு..
மொட்டையாய் நின்று
என் தனிமைக்கு
பாரம் ஏற்றி...

மறுமுறை உன்னைக்
காணும் வரையிலும்
இரவுகள் விடியாமற்
போகக்கடவது!!!

கேட்கும் வரங்களெல்லாம்
கிடைக்கின்றனவோ
இட்ட சாபம் மட்டும்
பலித்திட??

மறுபடியும்
நாட்காட்டியும்
நானும் மட்டும்!!!