Apr 22, 2009

உன் பயணங்களில் என் சுவடுகள்....


சென்னைப் பட்டணம்
சென்னை வாழ் மக்கள் எல்லோரும் தம் வாழ்வின் ஒரு பகுதியைப் பேருந்து பயணத்தில் கழித்து இருப்பார்கள்.... காலையில் எழுந்து அவசர அவசரமாய்க் கிளம்பி சாப்பிட்டும் சாப்பிடாமல், அலுவலகமோ கல்லூரியோ ஒரு மணி நேரத்திற்கு முன்னால் சென்று நிற்கும் இடம் பேருந்து நிறுத்தம்... பிடிக்கிறதோ இல்லையோ... வேறு வழி இல்லாமல் பயணிப்பவர் எத்தனையோ பேர்.... ஆனால் எனக்கு????? என் உறவாய், என் நண்பனாய் மாறிப்போனவன் இந்த பல்லவன்....
மெரீனா கடற்கரைப் பேருந்து நிலையத்தில் ஏறி ஒரு மணி நேரம் பயணிக்கும் எனக்கு சென்னையில் பிடித்ததே பேருந்துப்பயணம் மட்டும்தான். இவ ரொம்ப ஓவரா சுத்துறான்னு நினைக்காதீங்க .... உண்மைதான்... எனக்கும் சில நேரங்கள்ல பிடிக்காம போய் இருக்கு... நம்ம நெருங்கின தோழன்கூட நாம சண்டை போட மாட்டோமா??? அப்படித்தான் இதுவும்.... சன்னலோரமாய் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்தபடியே கல்லூரிக்குச் சென்ற நாட்கள் எல்லாம் எனக்கு இனிய நாட்களே...
எனக்கு ஏன் இந்த பல்லவனை இவ்வளவு பிடிக்கும் தெரியுமா? சன்னல் கம்பிகளை அவன் தோளாய் நினைத்துக்கொண்டு எந்தப் பிரச்சினையைப் பகிர்ந்து கொண்டாலும் மறுத்துப் பேசாமல் என் தலை வருடி ஆதரிக்கும் நண்பன்.. எங்களுக்குள் மௌனம் மட்டுமே மொழியாய் இருந்தது.... கூட்ட நெரிசலில் முட்டி மோதிக்கொண்டு இருந்தாலும்... எங்களுக்கான சம்பாஷனைகள் மட்டும் ஓய்ந்ததே இல்லை... செப்டம்பர் மாத சந்தியா காலங்களில் சிலு சிலுவென வீசும் வாடைக் காற்றும் சிறு மழைத் தூறல்களும் என் பயணத்தில் மழைக்கால சக பயணிகள்.. எத்தனையோ மக்கள்... பாரி முனையிலிருந்து பூ வாங்கிக்கொண்டு வழி நெடுக பூக்கட்டும் பூக்காரக் கிழவி, அலைபேசியோடு ஒட்டிப்பிறந்தவள் போல் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் கல்லூரி மாணவி, மாணவிகளைக் கிண்டலடித்துக்கொண்டும் பாட்டு பாடிக்கொண்டும் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள், வயிற்றுப்பிள்ளைத்தாச்சி, குடிகாரக்கிழவன், சின்னஞ்சிறு சுட்டிகள், வேலைக்குச்செல்லும் பெண்கள், இப்படி எத்தனையோ கதாபாத்திரங்களை சுமந்துகொண்டு என் நண்பனும்... இவர்கள் எல்லோரையும் பார்த்துக்கொண்டு, இவர்களுள் எதையோ தேடிக்கொண்டு நானும்....
திடீரென்று ஒருநாள் என்னைப் பிடித்திருக்கிறது என்றும், ஜாதகம் பொருந்தி இருக்கிறது என்றும் கூறி ஒரு குடும்பம் என்னைப் பெண் பார்க்க வருவதாய் ஒரு தகவல்... இதை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனே வீட்டிற்குள் நுழைந்தேன்... அங்கே நடுநாயகமாக இந்த வைபவத்துக்கு நாயகனாக உட்கார்ந்திருந்தான் என் வில்லன்.. அவன் வேறு யாருமல்ல.. சரியாக நான்கு நாட்களுக்கு முன்னால் அதே பல்லவனில் ஒரு பெண்ணை அருவருக்கத்தக்க வகையில் சீண்டி அவள் கையால் செருப்படி வாங்கிய அதே கண்ணியவான்...
வெறும் XY FACTORகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவனிடமா என் மெல்லிய உணர்வுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப்போகிறது???? அப்பாவிடம் விசயத்தைக் கூறி அவர்களை வீட்டைவிட்டு அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது....
என்னைக் காப்பாற்றிவிட்டான் என் பல்லவன்.
இப்படி என் வாழ்க்கை முழுவதும் என் துணைவனாய் வந்த உற்ற தோழன்தான் இன்று ஏதோ அரசியல் காரணங்களுக்காக எரிக்கப்பட்டு எரிந்துகொண்டிருக்கிறான்... அவனுள் நானும் எரிந்துகொண்டிருக்கின்றேன். நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல.. அப்படியே காதலித்திருந்தாலும், எங்கள் காதலுக்கு எதிர்ப்புகளும் இல்லை.. ஆனால் தனிமனித சுயநலத்துகாக ஒன்றாய் எரிக்கப்பட்டு இன்று மீளாத் துயிலில்....
எங்கள் கல்லறைகள் வேறு வேறாய் இருப்பினும் எங்கள் ஜீவன் ஒன்றாய் நித்திரரைக்குள் ஆழ்ந்துவிட்டது.