Nov 19, 2013

அரற்றல்


அடைத்த கதவுகளின்
இந்தப்புரத்தில்
ஒரு இருண்ட பாலைவனம்
அதில்
அழுந்தப் புதைக்கப்பட்ட வலிகள்
வடிகால் தேடும் முயற்சியில்

இதற்கென என்றின்றி
எதற்கென வேணினும்
பெருகக் காத்திருக்கும்
கண்ணீரும்

நடுநிசித் தேடல்களில்
ஏமாறித் திரும்பி வந்த
வெறுங்கையும்
நித்தம் ஒரு பொருள் சொல்லி
வெறுப்பை விழுங்க வைக்க

பழுப்பேறிய நாட்களின்
மூடுபனித் துயரமென
ஊடலும் கூடலுமான  நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை உடைக்கும் வேளையில்

சலனமற்றத் தனிமையின்
பெருங்குரல் அரற்றலின்
எதிரொலியாய்
கழுத்தையிறுக்கும் பயம்

சோறுண்ண உயிர்வாழ
நீ நிறைந்திருக்கும்
தூரத்துக் கனவுகள் மட்டுமே
ஊக்கமாய்
நனவின் உணர்வுகள்
நலிந்துபோய் நான்..