Feb 6, 2017

நிலானி

மணல் மணலா கோர்த்து வச்சு

மணி மணியா அலங்கரிச்சு

மயிலிறகு படுக்கையிட்டு

தகப்பன் கோட்டை ஒன்னு கட்டி வைக்க

வெள்ளெருக்கு நாரெடுத்து

பாட்டன் அரைஞாண் கொடி செய்ய

தங்கத்துல காதுக்கு

தாத்தன் குண்டுமணி தோடு செய்ய

வெள்ளி கொலுசெடுத்து

மாமன் தான் சீர் வைக்க

சொந்தம் அத்தனையும்

கைக்குள்ள முடிஞ்சுகொள்ள

அந்த நிலவே உசிர் கொண்டு

மகளாக எம்மடியில் உதிச்சாளே!

அவ உருட்டும் விழியாலே

உலகத்த சுழல வச்சா

பொக்க வாய் சிரிப்பாலே

காலத்த உறைய வச்சா!

அந்த நிலவத்தான் காட்டி

சோறூட்ட காத்திருக்கேன்

அவ மழலை மொழி கேட்க

நானுந்தான் தவங்கெடக்கேன்!!!


2 comments:

Karur Saravanan said...

அருமை..

Unknown said...

அருமை கவிஞரே 👏👏👏

Post a Comment