Feb 23, 2010

நினைவுகளுக்கு மௌனாஞ்சலி


கடந்த காலத்திற்குள்
தொலைந்து போன நினைவுகளைத் தேடியே
பேருந்து பயணங்கள் அனைத்தும்....
அலுத்துப் போன இயந்திர வாழ்வில்
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகின்றன
கடந்த காலத்தின் நினைவுகளும்
அதில் நிறைந்திருந்த குழந்தைத்தனமும்....
சுருங்கிப்போன நாட்களால்
ஏதோ ஒரு பேருந்து பயணத்தில்..
எழுதப்படாத நாட்குறிப்புகளுக்குள்
சில நிகழ்வுகள் மட்டும் கைகாட்டி செல்கின்றன...
பெயர் மறந்து போன
பால்ய கால நண்பனும்
அவனது கலர் கலர் சிலேட்டு குச்சிகளும்...
நீச்சல் கற்றுக்கொள்ள சென்ற கிணறும்
அன்றோடு முடிந்துபோன என் நீச்சலடிக்கும் ஆசையும்...
பங்காளித் தகராறுகளுக்கு பயந்துபோய்
வீட்டிற்குள் ஒளிந்து கிடந்த இருட்டு மூலையும்..
சாக்லேட்டு முதல் ஸ்கர்ட்டு போட்ட பொம்மை வரை
வாசலில் வரைந்து வைத்த தைப்பொங்கல் அதிகாலையும்...
பக்கத்து வீட்டு தோழிகளோடு போட்டி போட்டு
சேர்த்து வைத்த ஸ்டிக்கர் பொட்டு அட்டைகளும்...
காரணமே இல்லாமல் போட்ட சண்டைகளும்...
மாறிப்போன நண்பர்களும்...
சிறுபிள்ளைத்தனத்தின் அடையாளமாய்
இன்றும் நினைத்து அசடு வழியும் சம்பவங்களும்...
காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்...
மாற்றலாகிப்போன நண்பர்களும்....
மறந்துபோன எத்தனையோ நிகழ்வுகளோடு...
நாளை மறக்கப்பட காத்திருக்கும் நிகழ்வுகள்....
பின்னோக்கி செல்லும் சாலையோர மரங்களோடு...
என் நினைவுகளும்....
ஒன்றோடொன்று தொடர்பில்லாமல்...
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து...
இறந்த காலத்திற்கு
மௌன அஞ்சலி செலுத்திச் செல்கின்றன...

6 comments:

அண்ணாமலையான் said...

gud one...

SK said...

adade vaanga.. ninaivugaludan :)

Unknown said...

நல்ல பதிவு! நிமிடங்களானாலும், நாழிகைகளானாலும் மவுனம் பேசும் நினைவுகள் என்றுமே அலாதியானவை.

nila said...

நன்றி :)

Unknown said...

எங்களுக்கு எஞ்சியவை கவிதைகளும் இலக்கியங்களும்தான்
- ஈழநூல்கள் வெளியீட்டு விழாவில் உருக்கமான பேச்சு -கூத்தலிங்கம்
http://www.natpu.in/natpu/Pakudhikal/Eelham/kalachuvadu.php
உங்கள் கிருபாகரன் நட்புக்காக kiruram@gmail.com,natpu4u@gmail.com

Unknown said...

// சாக்லேட்டு முதல் ஸ்கர்ட்டு போட்ட பொம்மை வரை.......

கற்பனைகள் யாவும் கவிதைகள் ஆகிவிடுவதில்லை ... !! இந்த ஒரு வரியில் மொத்த வாழ்க்கையும் நீங்கள் சொன்ன குழந்தைத்தனத்தையும் எவன் ஒருவனால் உணர முடியாமல் போகிறதோ ... அவனுக்கு எது கவிதை ... எதை ரசிக்க வேண்டும் என்று தெரியாதென்று தான் அர்த்தம்..!! இது கவிதை ! இதன் ரசிகன் நான்..! ஒரு வரியில் என் மொத்த வாழ்க்கையும் திரும்பிப் பார்க்கிறேன் ! நன்றி ..! SKIRT poatta bommai!! அழகாக வரைந்திருக்கிறீர்கள் ..!! நிலா...

Post a Comment