Mar 17, 2012

கதறல்

கத்திக் கதறி கூப்பாடு போட்டு 
ஓய்ந்து சரிந்த 
தமிழனின் மரண ஓலத்துக்கு மட்டும் 
நம் காதுகள் 
செவிப்புலன் இழந்து போனதேனோ??

பிள்ளைகள் உடல் சிதைக்கப்பட்டு..
பெண்கள் மார் அறுக்கப்பட்டு.. 
நா வறண்டு கதறிச்செத்தவனுக்கு
இரண்டு சொட்டுக் கண்ணீர் விடுவதினும்
நூறாவது சதம் முக்கியமாகிப்போன 
மூடர்கள் நாம்.. 

ஐந்து குண்டுகள் மாரில் வாங்கிச் செத்தான்
அந்த பால்மணம் மாறா பாலகன்..
முதுகெலும்பில்லா மூடர்கள் நாம்..
வீட்டுக்குள் ஒளிந்துகொண்டோம்..
கொலைகாரனின் ஆதரவிற்காக 
எட்டப்பர்கள் ஆகிவிட்டோம்.. 

சொல்லி அழ வார்த்தைகள் இல்லை..
கேட்க ஒரே ஒரு கேள்வியுண்டு.. 
இந்தியன் ஏன் இவ்வளவு மலிந்து போனான்?? 

Dec 16, 2011

பெண்ணின் பெயரால் !!!!

"பெண்மைஎனப்படுவது யாதெனின்?" என்று 
இலக்கணச் சுவர் கட்டி 
புணர்ச்சி விதிகள் கற்பித்த   
அந்த வெற்றுவெளி 
இருட்டுக்கல்லறைக்குள் 
உணர்சிகள் பல  
ஊமை கண்மொழியென
ஒலியாக்கம் பெறாமல் 

ஊர் மொத்தமும்
ஒன்றுகூடி 
அக்கல்லறை வாசலில் 
"இந்த  எழுத்துக்கள் 
பெண்பாலாதலின் காறி உமிழப்படும்" 
என வாசகத்தட்டிகள் ஏந்தி நிற்க 

பிணந்தின்னிக் கழுகுகளின் 
இரத்தம் சொட்டும் 
நகங்களுக்கு பயந்தே 
என் பெண்ணியம் 
உணர்ச்சி மரத்த உடலாய்
இருட்டு மூலைக்குள் 
அண்டிக்கிடக்கிறது... 

எனக்கும் முன்னே 
அடுக்கடுக்காய் பிணங்கள்.. 
அழுகிக்கொண்டிருக்கும் 
சதைப்பிண்டங்கள் 
வாடை வீசக்கூடத்தயங்குகின்றன
ஆயிரம் பட்டங்கள் 
அசிங்கமாய் வந்து சேருமென... 

எங்கேனும் கண்டதுண்டா 
பெட்டை இனத்திற்கென 
இத்தனைப் பெயர்சூட்டல்கள்?? 

கடைசியாய் ஓர் எச்சரிக்கை 
ஆண்களே!!!
பெண்ணியப்பகுத்தறிவு எதிர்த்திடுங்கள் 
இல்லையேல் பெண்ணின் பெயரால் 
மனிதச்சந்தையில் 
கூவியழைக்கப்படுவீர்கள்... 


Dec 6, 2011

தனிப்பறவை


இனம்புரியா உணர்வுகளின் 
மேகக்கூட்டம்
எப்போதும் மனதுள்
மூட்டமிட்டுக்கொண்டே..

அதிகபட்ச சோகத்தின் வெளிப்பாடாய்
சந்தோஷமும்...
அதிகபட்ச சந்தோஷத்தின் வெளிப்பாடாய்
சோகமும்...
பிரம்மாண்ட கோபுரத்தின்
நிழலாய் மாறி
என்னை அழுத்திக்கொண்டிருக்க...

மழை விட்டுச்சென்ற
இளம் ஈரமும்..
இலையுதிர் கால
மரங்களை நீங்கிய
காய்ந்த இலைகளும்...
இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சமேன
என்னுள் பாரமேற்றியபடி...

சிறுசிறு ஆசைகளும்  
ஏக்கங்களும் சேர்த்து வார்க்கப்பட்ட 
கனவுக்கூட்டில் 
ஆங்காங்கே சில கயிறுகள்
அறுந்து விழுவதுபோல் 

காற்றின் திசையில் 
ஒரு தனிப்பறவை..
எனக்கென மட்டும் 
பல கதைகள் கூறிச்செல்வதாய் 

என் தனிமைப் பயணங்களில் 
ஏதோ ஒன்று 
ஏதுமற்ற வெற்றுவெளியில் 
முடிந்துவிடுவதாய் 
இப்படி.. 
எண்ணற்ற பிரமைகளின் 
பிரம்மாவாய் என் மனம் 
புரிதலும் 
புரிதல் நிமித்தமும் 
என்ற போராட்டம் நடத்தி 
மாநாடு போட்டு.. 
ஒன்றும் புரியாமல் மீண்டும் 
குழப்பத்திலடங்கி

எதற்குமே விளக்கம் 
கிடைக்காவிடினும் 
என் மனம் 
ஒற்றை நொடி தள்ளி நின்று 
ரசித்துக்கொண்டுதான் இருக்கிறது.. 

என்னையும் 

என் எண்ணங்களின் நீட்சியையும்!!!! 

Feb 22, 2011

நீயற்ற பொழுதுகள்

பின்னோக்கி முன்னோக்கி
எங்கெங்கோ ஓடி அலைந்தும்
கடைசியில் உன் முகம் நோக்கிடவே
கூடடைகின்றன உனக்கான 
என் நினைவுகள்...


இடைவெளி தண்டனையில் 
கணக்கிடுவதிலேயே 
கடந்து போகும் நாட்கள்..

உன் வெட்கச் சிரிப்பின்
நினைவுகளில் 
ஒற்றை நொடிப்பொழுது  
கோடிட்டுப்போகும் புன்னகை...

ஒவ்வொரு முறையும்
நீ உன் காதல் சொல்கையில் 
கண்ணோரம் துளிர்த்து நிற்கும்
கண்ணீர்த்துளி...

நீயின்றி எனைப் பார்க்கையில்
ஓடி வந்து கைகோர்த்துக்கொள்ளும்
கடற்கரை மணலும் 
ஆற்றங்கரைக் காற்றும்...

உன்னோடில்லா பொழுதுகள்
அத்தனையும் 
நம் நினைவுகளுடனே.... 

ஒவ்வொரு மணித்துளியும்..
உன்னுடன்
உன்னுடையவளாய் 
உன்னருகிலேயே 
உனக்காக மட்டுமே 
வாழ்ந்திட .......

நான்.......  







Feb 1, 2011

உயிர் பிணம்

காத்திருப்புகள் கடமையாய்..
களவு போன நிமிடங்களின் நினைவுகளோடு மட்டும்..
அரசமரநிழலினூடே மின்னும்
சூரிய நட்சத்திரங்களுக்குத் தெரியும்
காத்திருப்பின் அர்த்தம்...
எங்கோ தொலைந்து போய்க்கொண்டே இருக்கின்றன
எனக்கான அத்தனையும்...
சலனமில்லா ஒற்றையடிப்பாதையும்
இடுகாட்டு சாம்பல் வாசமும்
எரிக்கப்படக் காத்திருக்கும் 
உயிர் பிணத்திற்கு 
ஏதேதோ கூறிச்செல்வதாய்..
நீண்ட நெடு முற்றத்தில்
தனியாய் கிடக்கும் 
ஒற்றை சாய்வு நாற்காலியும்...
மேல்துண்டும் ..
அழுத்தும் தனிமையை உணர்த்துவதாய்.. 
பேசுவதற்காய் ஆயிரம் வார்த்தைகள்
சிதறிக்கிடப்பினும்...
தேடுவதற்கான தேவை 
இல்லாமலேயே போய்விட்டதாய்..
உணர்வுகள் மறத்துப்போயும்
ஒற்றை ஆறுதல்...

நாளை 
கல்லறைச் சருகுகள் துணையிருக்கும் எனக்கு... 




Dec 15, 2010

மீண்டும் வருகிறேன்

உட்சூழல் வெற்றிடமாய்..
வெளிச்சூழல் வேற்றிடமாய்..
தமிழ்ச்சூழல் தேடி 
எழுதாகவிதைக்கு 
சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு 
மீண்டும்.....

பாரதியையும் பாவேந்தனையும்
பாட்டுடைத்தலைவனாய் 
பாடிய கவியனைத்தும்
காணாமற் போனதுபோல்...
என் தமிழும் எனைவிட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்....

எழுதியெழுதி கிழித்துப்போட்ட 
காகிதங்களில் 
ஒன்றிரண்டு மிஞ்சியிருப்பினும்
என் தமிழ் எனைவிட்டு
போகாதிருந்திருக்கும்...

உகரம் இகரம் 
குறுக்கம் எச்சம் 
அணி, விகுதி 
யாப்பு அலங்காரம் என 
இலக்கணம் மொத்தமாய் 
மறந்துபோய்...
மூளை மரித்துப்போன முடமாய்....

தாய் தனிமை
காதல் காமம்
கல்லறை கருவறை என 
பாடுபொருள் எத்தனையிருப்பினும்...
மரத்துப்போய்க் கிடக்கும் 
மூளைக்குள் 
வார்த்தைகள் தேடியே 
காகிதங்கள் வெறுமையாய்... 
முடிக்கத்தெரியாமல் 
ஆரம்பித்தேனோ???
மீண்டும் ஒரு 
கிழிந்து போகும்
கவிதைக்கு இடமில்லை...

மழுங்கிப்போன மூளையோடு
மீண்டும் 'அ' னா 'ஆ' வன்னா 
பழக வருகிறேன்...  

Feb 23, 2010

நினைவுகளுக்கு மௌனாஞ்சலி


கடந்த காலத்திற்குள்
தொலைந்து போன நினைவுகளைத் தேடியே
பேருந்து பயணங்கள் அனைத்தும்....
அலுத்துப் போன இயந்திர வாழ்வில்
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகின்றன
கடந்த காலத்தின் நினைவுகளும்
அதில் நிறைந்திருந்த குழந்தைத்தனமும்....
சுருங்கிப்போன நாட்களால்
ஏதோ ஒரு பேருந்து பயணத்தில்..
எழுதப்படாத நாட்குறிப்புகளுக்குள்
சில நிகழ்வுகள் மட்டும் கைகாட்டி செல்கின்றன...
பெயர் மறந்து போன
பால்ய கால நண்பனும்
அவனது கலர் கலர் சிலேட்டு குச்சிகளும்...
நீச்சல் கற்றுக்கொள்ள சென்ற கிணறும்
அன்றோடு முடிந்துபோன என் நீச்சலடிக்கும் ஆசையும்...
பங்காளித் தகராறுகளுக்கு பயந்துபோய்
வீட்டிற்குள் ஒளிந்து கிடந்த இருட்டு மூலையும்..
சாக்லேட்டு முதல் ஸ்கர்ட்டு போட்ட பொம்மை வரை
வாசலில் வரைந்து வைத்த தைப்பொங்கல் அதிகாலையும்...
பக்கத்து வீட்டு தோழிகளோடு போட்டி போட்டு
சேர்த்து வைத்த ஸ்டிக்கர் பொட்டு அட்டைகளும்...
காரணமே இல்லாமல் போட்ட சண்டைகளும்...
மாறிப்போன நண்பர்களும்...
சிறுபிள்ளைத்தனத்தின் அடையாளமாய்
இன்றும் நினைத்து அசடு வழியும் சம்பவங்களும்...
காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்...
மாற்றலாகிப்போன நண்பர்களும்....
மறந்துபோன எத்தனையோ நிகழ்வுகளோடு...
நாளை மறக்கப்பட காத்திருக்கும் நிகழ்வுகள்....
பின்னோக்கி செல்லும் சாலையோர மரங்களோடு...
என் நினைவுகளும்....
ஒன்றோடொன்று தொடர்பில்லாமல்...
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து...
இறந்த காலத்திற்கு
மௌன அஞ்சலி செலுத்திச் செல்கின்றன...