Jul 9, 2025
இரவின் காதலி- 7
Sep 7, 2024
காட்சிப் பிழைகள்
ஜன்னலோர ரயில் பயணங்களின்
சட்டென கடந்து செல்லும் காட்சிகளாய்
வாழ்க்கை முழுதும்
ஆங்காங்கே ஆயிரம் நினைவுகள்..
உதறித் தள்ளியே
தீர வேண்டும் என சில..
உயிருள்ளவரை
வேண்டும் என சில..
வலிக்கும் நினைவுகள்
அகல மறுத்தும்..
இனிக்கும் நினைவுகள்
நிலைக்க மறுத்தும்..
வலிகள் மட்டும்
காட்சிப் பிழையாய்
மறைந்து விடும் வரம்
யார்க்கும் எளிதாய்
வாய்ப்பதில்லை..
உயிர் உருக்கி
உடைத்துச் செல்வதில்
நினைவுகளுக்கும் இணையில்லை!
Aug 15, 2023
வானம் பொய்க்குமா?
தாமரை இலை மேல் படர்ந்த
ஒற்றைப் பெருந்துளி நீரில்
சிறைப்பட்ட மீன்குஞ்சாக நான்..
சுற்றுச்சுவர் சுருங்கி
நெருக்கிக் கொண்டே வருகிறது
அகோரமாக ஓலமிடுகிறது மனம்..
மறந்தும் ஒரு முனகல் சத்தம் வெளிவரவில்லை.
மழைக்காக காத்துக்கொண்டே இருக்கிறேன்
வெளுத்துப் போய் காண்கிறது
வானம்!
வானம் பொய்க்குமா?
Jul 8, 2023
வரம்
அதீத வெறுப்பையும்
ஆழமான நேசத்தையும்
நிமிடத்திற்கு ஒன்றாய்
மாறி மாறி
உணரச் செய்கிறாய்..
நாட்களின் முடிவில்
துலாபாரம்
உன்னிடமே
கணத்துக் கிடக்கிறது!!
எனக்கான வரத்தையும்
உனக்கான சாபத்தையும்
சேர்த்தே தருகிறேன்
பிழைத்துப் போ!
அடுத்த ஜென்மத்திலும்
என்னவனாக
பிறக்கக் கடவது!!
May 17, 2023
இரவின் காதலி-6
தூக்கம் தொலைத்த இரவில்
ஏதோ ஒரு மூலையில்
முடிவின்றி நீளும்
இருண்ட முடிவிலியில்
கவனம் நிலைத்து நின்றபடி
நினைவுகள் தொடரவில்லை
தேடல்கள் எதுவுமில்லை
அழுத்திக்கொண்டிருக்கும்
ஏதோ ஒன்றின்
எடை மட்டும் கூடியபடி
வெளிவர மனமே இன்றி
விரும்பி தோற்றபடி இருக்க
மீண்டு வர இயலா
அந்தகாரத்துள்
இழுத்துக்கொண்டே
பயணிக்கிறது இரவு
இரவின் பிடியில்
நிழல் கனவு
நிஜம் கண்ணீர்
எவற்றிற்கும் நிறமில்லை
நானும், என் நிறமற்ற
இரவும் மட்டும்!!
Aug 13, 2022
இரவின் காதலி 5
விடியாமல் இரவு
நீண்டபடி இருக்கட்டும்
கண்ணீர் தாரைகள்
காயுமட்டும்..
காற்றை அடைத்து
இழுத்து முடிச்சிட்ட பலூனாய்
வெடித்துச் சிதற
சகுனம் நோக்கி இதயம்..
தன்னை இழந்து
ஆழப் புதைந்து
இருப்பை மறைத்து
ஒளிந்து கொள்ளும் சுயம்..
வஞ்சித்தே வைத்திருக்கிறது
கானல் நீராய்
அக்களிப்பு காட்டும்
வாழ்க்கை..
நடிக்கவேனும்
பழகியிருக்கிறேன்
சிரித்துக் கொண்டே இருப்பதற்கு..
இரவுகளேனும்
இடைவெளி
வாங்கிக்கொள்ளட்டும்
ஆற்றாமைகளை
அழுதுகரைக்க..
Apr 12, 2020
இரவின் காதலி- 4
இரவின் காதலி நான்!!
மீளமுடியா தூரம் வரை
இரவோடு
தனிமையில் கைகோர்த்து
இருளின் நிசப்தத்திற்குள்
தொலைந்துவிட
நோன்பு நோற்பவள் நான்!
என் தனிமை இச்சை
ஏக்கம் ஏமாற்றம்
காதல் காமம்
என மொத்தத்திற்கும்
தாயம் இரவென உணராமல்
எனக்கும் இரவுக்குமான
சம்பாஷனைகள்
விளங்காதபடிக்கு
எக்காளமிட்டுச் செல்கின்றன
வானத்து மின்மினிகள்.
இருப்பின் ஆதாரம்
இரவெனக்கொண்ட
அவ்வுற்கைகளுக்கே
என் அறற்றல்கள்
புரியாவிடில்
மற்றவர்கள் எம்மாத்திரம்???